செங்கல்பட்டு
கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தில் மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து - 7 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
|கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி கிராமத்தில் உள்ள பஜனை கோவில் திருவிழா கடந்த 15-ந்தேதி நடைபெற்றது. அன்றைய தினம் இரவு சாமி வீதியுலா நடந்தது. பொத்தேரி கம்பர் தெருவில் ஊர்வலம் வரும்போது அதே கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன், லோகநாதன் உள்பட 7 பேர் மது போதையில் சாமி ஊர்வலம் செல்லும் போது இடையூறு செய்து நடனமாடி கொண்டிருந்தனர். அப்போது போதையில் நடனமாடிய வாலிபர்களை அங்கு இருந்த கார்த்திக் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கார்த்திக்குக்கும் போதையில் நடனமாடிய வாலிபர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதனை பார்த்த கிராம மக்கள் இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 17-ந்தேதி இரவு கார்த்திக் பொத்தேரி பெருமாள் கோவில் தெரு அருகே நடந்து செல்லும்போது 7 பேர் கொண்ட கும்பல் கார்த்திக்கை வழி மறித்து சரமாரியாக உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தினார்கள். இதை பார்த்த அவரது உறவினர் ஜெய்சங்கர் தடுக்க முயன்ற போது அவரையும் அந்த கும்பல் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.
இதில் படுகாயம் அடைந்த ஜெய்சங்கர், கார்த்திக் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் பொத்தேரி கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன், லோகநாதன், உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.