அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் - சட்டப்பேரவையில் காரசார விவாதம்
|அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
சென்னை,
தமிழகத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மார்ச் 21-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து வருகிறது.
இதன்படி இன்று காலை கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது, கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தை சிலர் திட்டமிட்டு தாக்க முயற்சித்தனர். தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் துறையில் புகார் அளித்தோம். ஆனால் காவல் துறை பாதுகாப்பு வழங்கவில்லை" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "யார் அத்து மீறியது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறை பொறுப்பு. யார் வெறியாட்டம் நடத்தினார்கள் என்பதை தனி மேடை போட்டு கூட பேசத் தயாராக இருக்கிறேன்" என்றார்.
இதில் பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த பிரச்சினை உட்கட்சி விவகாரம். அலுவலகத்திற்கு உள்ளே நடந்தவைக்கு காவல்துறை பொறுப்பல்ல. இருப்பினும் வெளியே பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணை நடக்கிறது. கோர்ட்டிலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்" என்று தெரிவித்தார்.