திருச்சி
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம்
|நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
திருச்சி பாலக்கரையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் ேநற்று கல்மந்தை காலனி பொதுமக்கள் குடும்பத்தோடு குடியேறும் போராட்டம் நடைபெற்றது. அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளைச் செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் லெனின், ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜா கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தின்போது, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை அதிகாரிகளின் மெத்தன போக்கால் 5 ஆண்டு காலமாக ஏழை மக்கள் வாடகை வீட்டில் தவிக்கின்றனர். கடன் பெற்று ரூ.1 லட்சம் கட்டி 7 மாதமாகியும் 111 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்து தரவில்லை என்று கூறி, கோரிக்கைகளை வலியுறுத்தி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்திற்குள் கல்மந்தை காலனி ஊர் பொதுமக்கள் செல்ல முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். இதில் விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் உள்ளிட்டோர் கலைந்து சென்றனர்.