திண்டுக்கல்
தனியார் பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள்
|நிலக்கோட்டையில் பயணிகளை இறக்கி விட்டதால் தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் தனியார் பஸ்கள் நிலக்கோட்டை பயணிகளை ஏற்றி செல்வதில்லை என்று கூறப்படுகிறது. அதன்படி மதுரையில் இருந்து புறப்பட்ட 2 தனியார் பஸ்களில் ஏறி அமர்ந்திருந்த, நிலக்கோட்டையை சேர்ந்த பயணிகளை கண்டக்டர்கள் இறக்கி விட்டு சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பயணிகள், நிலக்கோட்டையில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகளின் உறவினர்கள், நிலக்கோட்டை நால்ரோட்டில் திரண்டனர். பின்னர் அந்த வழியாக வந்த 2 தனியார் பஸ்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர்-கண்டக்டர்களிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இனி வருங்காலத்தில் நிலக்கோட்டையில் தனியார் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து பஸ்களை விடுவித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால், நிலக்கோட்டையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.