திருவள்ளூர்
திருநின்றவூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
|திருநின்றவூர்- பெரியபாளையம் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
திருநின்றவூர் அடுத்த பாக்கம் பகுதியில் திருநின்றவூர்-பெரியபாளையம் சாலை விரிவாக்கம் செய்ய இருப்பதால் சாலையோரம் உள்ள வீடுகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு பாக்கம் ராமநாதபுரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே வருவாய் துறை மூலம் அறிவிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அந்த இடத்தில் அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யக்கூடாது எனக் கூறி அப்பகுதியின் மற்றொரு தரப்பிலான பொதுமக்கள் நேற்று காலை திருநின்றவூர்- பெரியபாளையம் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சதாசிவம் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.