கன்னியாகுமரி
வடசேரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
|ஜெபக்கூடம் கட்டுவதை எதிர்த்து வடசேரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
ஜெபக்கூடம் கட்டுவதை எதிர்த்து வடசேரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெபக்கூடம்
நாகர்கோவில் வாத்தியார்விளை கிரவுண்ட் தெருவில் ஒருவர் வீட்டில் ஜெபக்கூட்டம் நடைபெற்று வந்தது. மேலும் அந்த வீட்டில் ஜெபக்கூடம் கட்டும் பணி நடந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் நேற்று ஜெபக்கூடம் கட்டுமான பணிக்கான பொருட்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்மக்களும், இந்து முன்னணி மற்றும் அய்யப்பா சேவா சமாஜம் ஆகிய இந்து அமைப்புகளும், பா.ஜனதா நிர்வாகிகளும் அங்கு திரண்டனர்.
பேச்சுவார்த்தை
இதைத் தொடர்ந்து வாத்தியார்விளை ஊர் தலைவர் வைகுண்டமணி தலைமையில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், விசுவ இந்து பரிஷத் மாநகர் தலைவர் நாஞ்சில் ராஜா, மாநில இணை செயலாளர் காளியப்பன், பா.ஜனதா மாவட்ட பொதுசெயலாளர் ஜெகநாதன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வடசேரி போலீஸ் நிலையத்துக்கு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கட்டுமான பணிகள் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதுவரை ஜெபக்கூட பணிகள் நடக்காது என்று போலீசார் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.