பெரம்பலூர்
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்
|ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மறியல்
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் கே.கே.நகர், குறிஞ்சி நகரில் வசிக்கும் பொதுமக்கள் குறிஞ்சி நல குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஆசைதம்பி தலைமையில் நேற்று காலை துறைமங்கலம் கே.கே.நகர் ஆர்ச் முன்புள்ள திருச்சி செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதோடு, அந்தப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
அப்போது அவர்கள் கூறுகையில், மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி, துறைமங்கலம் கே.கே.நகர் மெயின் ரோட்டில் இருந்து நகராட்சி தண்ணீர் தொட்டி சுற்றுச்சுவர் வழியாக அமைக்கப்பட்ட பொதுப்பாதை வழியாக துறைமங்கலம் கே.கே.நகர், புதுக்காலனி, வடக்கு தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அரசு நகர்ப்புற மருத்துவமனை, மாவட்ட மைய நூலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், கால்நடை மருத்துவமனை, புதிய பஸ் நிலையத்துக்கு சென்று வந்தனர்.
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு
அந்த பொதுப்பாதையை அருகே உள்ள ஒரு வீட்டுக்காரர் ஆக்கிரமித்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஏற்கனவே கடந்த மாதம் 31-ந்தேதி நகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
தற்காலிகமாக திறப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசாரும், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜும் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொதுப்பாதையை தற்காலிகமாக பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள திறந்து விட்டார். இதனால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.