சென்னை
மாநகர பஸ்களை நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும் - டிரைவர், கண்டக்டர்களுக்கு உத்தரவு
|மாநகர பஸ்களை நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என்று டிரைவர், கண்டக்டர்களை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர், அனைத்து டிரைவர், கண்டக்டருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர போக்குவரத்துக் கழகம் தினமும் பஸ்களை இயக்கி வருகிறது. ஆனால் பஸ்களை டிரைவர்கள் சாலையின் இடது ஓரமாக பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சிறிது தூரம் தள்ளி நிறுத்துவதால் பயணிகள் சிரமத்துடன் ஓடிச்சென்று ஏறும் பாதுகாப்பற்ற சூழ்நிலை எழுகிறது.
பயணிகள் கீழே விழுந்து காயமடையும் நிலையும், சில நேரங்களில் மரணத்தை ஏற்படுத்தும் விபத்தும் நேர்கிறது.
எனவே அனைத்து டிரைவர், கண்டக்டர்களும் தங்களின் பணியின்போது பஸ்சை உரிய பஸ் நிறுத்தத்தில் உள்ள 'பஸ் பே' இடத்தில் நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்க வேண்டும். பஸ்களை சாலையின் நடுவில், பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கண்டிப்பாக நிறுத்தக்கூடாது.
எனவே இதுபற்றி டிரைவர், கண்டக்டர்களிடம் அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் விளக்கிக்கூற வேண்டும். உரிய பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
பயணச்சீட்டு பரிசோதகர்களும் முழுமையாக பரிசோதனையில் ஈடுபட்டு டிக்கெட் மூலம் வரும் வருவாயை முழுமையாக எய்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.