மதுரை
சி.ஐ.டி.யூ. சார்பில் நடைபயண பிரசாரம்
|ெதாழிலாளர் நலன் வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. சார்பில் நடைபயண பிரசாரம் நடந்தது.
மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகளை மட்டுமே அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. சார்பில் தமிழகத்தின் 7 முனைகளிலிருந்து நடைபயணம் நடைபெற்றது. தென்காசியிலிருந்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மணிகண்டன் (தென்காசி), விருதுநகர் பி.என்.தேவா, எம்.மகாலெட்சுமி (விருதுநகர்), க.கவுரி (மதுரை புறநகர்), லூர்துரூபி (மதுரை புறநகர்) உள்பட 36 பேர் நேற்று மதுரையில் நடைபயணம் மேற்கொண்டனர். மதுரை செல்லூர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியில் தொடங்கிய நடைபயணம் தெப்பக்குளத்தில் உள்ள இந்திய தொழிற்சங்க மையத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான பி.ராமமூர்த்தி சிலை அருகே நிறைவடைந்தது. மாலை மதுரை பெத்தானியாபுரத்தில் தொடங்கிய நடைபயணம் பைக்காராவில் நிறைவடைந்தது. மதுரையில் பட்டுக்கோட்டை வீதியில் தொடங்கிய நடைபயணம் கட்டுமானத்தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பயணித்து தொடர்ந்து கைத்தறி தொழிலாளர்கள் வாழ்ந்த பகுதிகள் வழியாக தாகூர் நகரை அடைந்தது. தாகூர்நகரில் ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர்கள் சங்கத்தினர் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நடைபயணக்குழுவை வரவேற்றனர். நடைபயணக்குழுவினர் முனிச்சாலை பகுதியில் திரண்டிருந்த ஆட்டோ தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், மார்க்கெட் வியாபாரிகள், தங்க நகை தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினர். நடைபயணத்தின் போது, நலவாரியத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். பணப் பலன்களை அதிகப்படுத்த வேண்டும். மோட்டார் வாகன சட்டதிருத்தம், மின்சார வினியோக சட்ட திருத்தம்-2022-ஐ திரும்பப் பெற வேண்டும். மாநில அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென வலியுறுத்தினர்.