திருநெல்வேலி
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் மனு- சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு வழங்கினர்.நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மாவட்ட செயலாளர் மோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாயகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். அதில், ''தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். தினக்கூலி ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். நகர்ப்புறங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். வீட்டுமனை இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை ஒதுக்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. கந்துவட்டி கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் மனு கொடுத்தனர்.
பாளையங்கோட்டை சீனிவாசன்நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறி, அந்த பகுதி மக்கள் ஓய்வுபெற்ற தபால்காரர் கிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.முன்னீர்பள்ளம் ரெயில்வே மேம்பாலத்தில் எரியாமல் இருக்கும் மின்விளக்குகளை உடனே எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் மனு கொடுத்தார். பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் சங்கரசுப்பிரமணியன், தனக்கு மீண்டும் பணி கேட்டு முதல்-அமைச்சரிடம் கொடுத்த மனுவிற்கு முறையாக நடவடிக்கை எடுக்காததால், வருகிற 8-ந்தேதி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி மனு கொடுக்க வந்தார். அவரை கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல போலீசார் அனுமதிக்க மறுத்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சங்கரசுப்பிரமணியன் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்தார்.