ஓய்வூதியர்கள் பிரச்சினைக்கு தீர்வு கோரி சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்: மாநிலம் முழுவதும் இன்று நடக்கிறது
|ஒப்பந்த காலம் நீட்டிப்பு மற்றும் ஓய்வூதியர்கள் பிரச்சினைக்கு தீர்வு கோரி சி.ஐ.டி.யு. சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் தலைவர் சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்து ஊழியர்களுக்கு கடந்த 1977-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு ஊதியம் மற்றும் இதர பிரச்சினைகளில் தீர்வு காணப்படுகிறது. 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதியுடன் 13-வது ஊதிய ஒப்பந்தம் நிறைவு பெற்றுவிட்டது.
2019-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆட்சியில் ஒப்பந்தம் உருவாக்கப்படாததால் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலை நிறுத்தம் நடந்தது.
இந்தநிலையில் தற்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எட்டப்பட்டு உள்ளது. ஆனால் ஒப்பந்த காலத்தை 4 ஆண்டுகளாக நீட்டித்ததில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்திற்கு உடன்பாடு இல்லை.
அதேபோல் ஓய்வுபெற்ற 85 ஆயிரம் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க மறுப்பது சரியல்ல. கோரிக்கைகள் தொடர்பாக சுமுகமான முடிவுகள் எட்டப்பட்ட நிலையில் ஒப்பந்த காலம் நீட்டிப்பும், ஓய்வூதியர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாததும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை கண்டித்து நாளை (இன்று) மாநிலம் முழுவதும் உள்ள 300 பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.