கடலூர்
பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
|சிதம்பரம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அருகே வல்லம்படுகை பரதேசியப்பர் கோவில் தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இப்பகுதியில் வடிகால் வாய்க்கால் வசதி அமைத்து கொடுக்கப்படாததால் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தேங்கிய மழை நீரை உடனடியாக வடிய வைக்கக்கோரியும், இனி வரும் காலங்களில் இது போன்று மழைநீர் தேங்காமல் இருக்க உரிய வடிகால் வசதி செய்து கொடுக்க கோரியும் அப்பகுதி மக்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒன்றிய நிர்வாகி நடராஜன் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வல்லம்படுகை பஸ் நிறுத்தம் அருகே ஒன்று திரண்டு சாலை மறியல் செய்ய முயன்றனர். இது குறித்த தகவலின் பேரில் சிதம்பரம் கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராகிம் மற்றும் அலுவலர்கள் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.