< Back
மாநில செய்திகள்
காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
விழுப்புரம்
மாநில செய்திகள்

காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

தினத்தந்தி
|
30 Sept 2022 12:15 AM IST

விழுப்புரம் அருகே குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

விழுப்புரம்

குடிநீர் பிரச்சினை

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியம் தெளி கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் தினமும் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படும் மின் மோட்டார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென பழுதானது. இதனால் குடிநீர் வினியோகம் செய்வது தடைபட்டது. இதுபற்றி அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட காணை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் பழுதான மின் மோட்டாரை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக குடிநீர் கிடைக்காமல் அக்கிராம மக்கள், வெகுதொலைவு நடந்தே சென்று வயல்வெளி பகுதிகளில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

இந்த குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் பழுதாகி 10 நாட்களாகியும் சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் நேற்று காலை தெளி கிராம மெயின்ரோட்டில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோனூர்- கல்பட்டு கிராம சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் காணை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காணை வட்டார வளர்ச்சி அலுவலர் எழிலரசன், அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பழுதான மின் மோட்டாரை சரிசெய்து உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

Related Tags :
மேலும் செய்திகள்