< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்

காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

தினத்தந்தி
|
25 Oct 2023 12:15 AM IST

கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்திற்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டதுடன், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னேரிமுக்கு கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, கோத்தகிரி பேரூராட்சி மூலம் தாழ்வான பகுதியில், 3 கிணறுகள் வெட்டப்பட்டு, அங்கிருந்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின் மோட்டார்களில் ஒரு மோட்டார் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் பழுதடைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் அந்த மோட்டாரை பழுது நீக்க நடவடிக்கை எடுக்காததால், குடிநீர் விநியோகம் தடைப்பட்டதாக தெரிகிறது.

மேலும் இப்பகுதி குடியிருப்புவாசிகள் நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீரை சுமந்து செல்ல வேண்டிய சிரமம் ஏற்பட்டது.


இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு கோத்தகிரியில் இருந்து கூக்கல்தொரை செல்லும் பிரதான சாலைக்கு வந்தனர். பெண்கள் உள்பட சுமார் 60 -க்கும் மேற்பட்டோர் கன்னேரிமுக்கு பகுதியில் காலி குடங்களுடன் திடீரென சாலையில் அமர்ந்து, பழுதடைந்த மோட்டாரை உடனடியாக சரி செய்ய வேண்டும், குடியிருப்புகளுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைப் பட்டதுடன், பரபரப்பு நிலவியது.


இது குறித்து தகவலறிந்த கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ், பேரூராட்சி பிட்டர் மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக மோட்டார் பழுது நீக்கப்பட்டு விரைவில் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து சமாதானம் அடைந்த கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கிராம மக்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்