< Back
மாநில செய்திகள்
பயணிகளை ஏற்ற மறுத்த அரசு விரைவு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

பயணிகளை ஏற்ற மறுத்த அரசு விரைவு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

தினத்தந்தி
|
9 Jun 2023 2:55 PM IST

சென்னை கிண்டி பஸ் நிறுத்தத்தில் மாமல்லபுரம் பயணிகளை ஏற்ற மறுத்த அரசு விரைவு பஸ்சை மாமல்லபுரம் புறவழிசாலையில் ஒரு மணி நேரம் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்ற மறுப்பு

சென்னை கோயம்பேட்டில் இருந்து மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான அரசு பஸ்கள் புதுச்சேரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாமல்லபுரத்தை சேர்ந்த 7 பேர் கிண்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து புதுச்சேரி பஸ்சில் மாமல்லபுரம் செல்வதற்காக ஏறினர். அப்போது அந்த பஸ்சின் கண்டக்டர் அவர்கள் 7 பேரையும், மாமல்லபுரத்தில் பஸ்நிற்காது கீழே இறங்குங்கள் என்று வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

கண்டக்டரின் எச்சரிக்கையை மீறி 7 பேரும் பஸ்சில் ஏறி பயணம் செய்கின்றனர். அந்த பஸ் மாமல்லபுரத்தை நெருங்கி கொண்டிருக்கும்போது அதில் பயணம் செய்த மாமல்லபுரம் பயணிகள் சிலர் தாங்கள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து உறவினர்களுக்கும், பொதுமக்களுக்கும் தகவல் தெரிவிக்கின்றனர்.

சிறை பிடிப்பு

இதையடுத்து மாமல்லபுரம் பயணிகளை ஏற்ற மறுத்த அந்த பஸ்சை சிறைபிடித்து பாடம் கற்பிக்க வேண்டும் என்று மாமல்லபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் 80-க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் புறவழிச்சாலையில் ஒன்று திரண்டனர். குறிப்பிட்ட அந்த பஸ் வந்தவுடன் மாமல்லபுரம் பயணிகள் 7 பேரும் பஸ்சில் இருந்து இறங்கியவுடன் மாமல்லபுரம் பொதுமக்கள் அந்த பஸ் கண்டக்டர், டிரைவர் இருவரையும் கீழே இறக்கிவிட்டு, மாமல்லபுரம் பயணிகளை ஏற்ற மறுத்த அந்த பஸ்சை சிறைபிடித்தனர். மாமல்லபுரத்தில் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டும் புதுச்சேரி செல்லும் பஸ்கள் மாமல்லபுரம் பயணிகளை சென்னையில் ஏற்ற மறுப்பது ஏன் என கண்டக்டர், டிரைவரிடம் அப்போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் ஊருக்கு செல்ல காத்திருந்த புதுச்சேரி பயணிகள் நாங்கள் எங்கள் ஊருக்கு செல்ல வேண்டும், ஏன் பஸ்சை சிறைபிடித்து வைத்துள்ளீர்கள் என கேட்கவே அவர்களுக்கும், மாமல்லபுரம் பொதுமக்களும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

துறை ரீதியாக நடவடிக்கை

இது குறித்து தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன்குமார் விசுவநாதன், சீனிவாசன், லதாகுப்புசாமி, பூபதி ஆகியோர் சென்று பொதுமக்களை சமாதானம் செய்து, இதுகுறித்து அரசு விரைவு பஸ் காஞ்சீபுரம் கோட்ட பொது மேலாளர் தட்சிணாமூர்த்தி, சென்னை கோயம்பேடு பணிமணை மேலாளர் முருகன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு மாமல்லபுரம் பயணிகளை ஏற்றாமல் சென்ற குறிப்பிட்ட பஸ்சின் டிரைவர், கண்டக்டர் மீது துறை ரீதியாக தக்க நடவடிக்கை எடுப்பதாகவும், இனி சென்னையில் புதுச்சேரி செல்லும் அனைத்து பஸ்களிலும் மாமல்லபுரம் பயணிகளை சென்னையில் உள்ள கிண்டி, திருவான்மியூர் நிறுத்தங்களில் ஏற்றி செல்ல அறிவுறுத்துவதாகவும் உறுதி அளித்தனர். அதிகாரிகளின் உறுதி மொழியை ஏற்ற பொதுமக்கள் பஸ்சை விடுவித்தனர்.

மேலும் செய்திகள்