காஞ்சிபுரம்
ஆதனூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அளவிடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு - வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்
|ஆதனூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அளவிடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிலம் என்று நினைத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 160-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் வீடுகள் கட்டியுள்ள 12 ஏக்கர் 67 சென்ட் நிலப்பரப்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்பதால் வருவாய்த்துறை அதிகாரிகள் லட்சுமிபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபடுவதற்காக நேற்று ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய்த்துறை குழுவினர் ஆதனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் வீடு கட்டி குடியிருக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு திரண்டு வந்து நிலத்தை அளவிடும் பணிக்காக வந்த வருவாய்த்துறை அலுவலர்களை முற்றுகையிட்டு நிலத்தை அளவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் இந்த இடம் சம்பந்தமாக நாங்கள் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம், இந்த மனு மீதான அடுத்த வாய்தா வரும் வரை நாங்கள் குடியிருக்கும் லட்சுமிபுரம் இடத்தில் எந்த விதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும், தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது. ஆகவே நீங்கள் சுப்ரீம் கோர்ட்டை மீறி ஏன் நாங்கள் குடியிருக்கும் பகுதியை அளவிடுவதற்காக வந்தீர்கள் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டே இருந்தனர்.
இதனை தொடர்ந்து நிலத்தை அளவிடும் பணிக்காக வந்த 6 பேர் கொண்ட வருவாய்த்துறையினர் ஆதனூர் கிராமத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் ஆதனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்அமுதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உடனடியாக அரசு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.