காஞ்சிபுரம்
உத்திரமேரூர் ஒன்றியத்தில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
|உத்திரமேரூர் ஒன்றியத்தில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதவப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கடம்பர் கோவிலில் புதிதாக கல்குவாரி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட கலெக்டரிடமும் புதிய கல்குவாரி அமைப்பதை எதிர்த்து பலமுறை மனு அளித்தும் குவாரி அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
இதை தொடர்ந்து பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் வெங்கச்சேரியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாசில் பிரேம் ஆனந்த், மாகரல் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்ளிட்டோர் சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காஞ்சீபுரம்-உத்திரமேரூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.