< Back
மாநில செய்திகள்
ஆரணியில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆரணியில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தினத்தந்தி
|
23 Sept 2023 12:52 PM IST

ஆரணியில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு வேறு இடத்தில் மாற்ற கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியின் 7-வது வார்டில் உள்ள கம்மாள தெருவில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் அருகே கோவில்கள், வணிக கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளது. டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆரணி பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி டாஸ்மாக் கடையை பொதுமக்களின் நலன் கருதி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்திற்கு மாற்றி அமைக்குமாறு அரசு மதுபான மாவட்ட மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.

இதையடுத்து நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட துணை கலெக்டரும், அரசு மதுபான மாவட்ட மேலாளருமான ஜெயக்குமார் அதிகாரிகளுடன் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்தார். இதையறிந்த அந்த பகுதி மக்கள், வியாபாரிகள் என அனைவரும் அதிகாரி ஜெயக்குமாரை முற்றுகையிட்டு டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த அரணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜெயக்குமார் மேல் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.

மேலும் செய்திகள்