திருச்சி
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
|ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
துறையூர்:
துறையூரை அடுத்த காமாட்சிபுரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் மகளிர் சுகாதார வளாகம் தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அருகே அதே ஊரை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர், கடந்த 3 ஆண்டுகளாக ஆடு, மாடுகளை கட்டி, ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வழியாக மகளிர் சுகாதார வளாகத்திற்கு செல்லக்கூடிய தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் குப்பை கொட்டுவதற்காக குழி தோண்டியபோது, அந்த குழாய் உடைக்கப்பட்டதால், ஒரு ஆண்டுக்கு மேலாக அந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிைலயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டுத் தரக்கோரி ஊராட்சி சார்பில் துறையூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் லெனின் மற்றும் வருவாய் ஆய்வாளர் பூங்கொடி ஆகியோர் நேற்று காமாட்சிபுரம் ஊராட்சிக்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்றக்கூறி, அரசு ஊழியரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு அளித்து வருகிறோம். தற்போது அரசு ஊழியர் தகர கொட்டகை அமைத்துள்ளார். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி கேட்டனர். இதையடுத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை மீட்டு தருவதாக கூறியதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர். மேலும் உடனடியாக அந்த இடத்தை மீட்டு சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே அரசு ஊழியர் சண்முகராஜின் மனைவி சுசீலா(வயது 42), அந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும், எனவே அதனை ஆக்கிரமிப்பு என்று அகற்ற முடியாது என்றும் கூறி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார், அருகில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி அவரை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் தற்கொலைக்கு முயன்றதாக சுசீலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.