செங்கல்பட்டு
கல்பாக்கம் அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவினரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
|கல்பாக்கம் அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவினரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரைபகுதி அருகே மிகவும் பழமையான டச்சு கோட்டை உள்ளது. இங்கு இந்தியன் 2 படபிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்துவந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் நடித்து வந்தார்.
மேலும் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்தார். நேற்று இறுதி நாள் படபிடிப்பு நடந்து முடிந்த பின்னர் அந்த பகுதி மக்கள் சிலர் படபிடிப்பு குழுவினரிடம் அங்கு உள்ள கோவிலுக்கு நன்கொடை கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படபிடிப்பு குழுவினருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் படபிடிப்பு நடந்த டச்சு கோட்டையை அந்த பகுதியை சேர்ந்த சிலர் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படபிடிப்பு குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.