< Back
மாநில செய்திகள்
குப்பைகள் மறுசுழற்சி மையத்தை இடமாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
விருதுநகர்
மாநில செய்திகள்

குப்பைகள் மறுசுழற்சி மையத்தை இடமாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

தினத்தந்தி
|
2 July 2023 12:42 AM IST

ராஜபாளையத்தில் குப்பைகள் மறுசுழற்சி மையத்தை இடமாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் குப்பைகள் மறுசுழற்சி மையத்தை இடமாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நுண் உர செயலாக்க மையம்

ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 31 மற்றும் 32-வது வார்டில் திருவனந்தபுரம் தெரு, நேதாஜி தெரு, மங்காபுரம், முத்தன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக மங்காபுரத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் நகராட்சி சார்பில் குப்பைகளை மறு சுழற்சி செய்யும் நுண் உர செயலாக்க மையம் கட்டப்பட்டது.

இந்த மையம் கட்டும் போதே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பொது மக்கள் எதிர்ப்பை மீறி நுண் உர செயலாக்க மையம் கட்டப்பட்டது. நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு நாள் கணக்கில் தேக்கி வைக்கப்படுகிறது.

ெபாதுமக்கள் போராட்டம்

மக்கும் குப்பைகள் 15 நாட்கள் வரை இருப்பு வைக்கப்பட்டு மக்கிய பின்னர் உரமாக்கப்படுகிறது. இதனால் இங்கிருந்து வெளியேறும் துர்நாற்றம், காற்று மாசு காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

ஆதலால் இந்த மறு சுழற்சி மையத்தை இடம் மாற்றக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இடம் மாற்றம்

பொதுமக்கள் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 31- வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ராதா மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட அனைவரும் குப்பை கிடங்கை இடம் மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் தங்கள் கோரிக்கைகளை அரசும், மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்