காஞ்சிபுரம்
மாங்காட்டில் தந்தை, சகோதரியை கழுத்தை அறுத்துக்கொன்ற சினிமா கலைஞர் கைது
|மாங்காட்டில் தந்தை, சகோதரியை கழுத்தை அறுத்துக்கொன்ற சினிமா கலைஞரை போலீசார் கைது செய்தனர்.
கொலை
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடிசன் நகர் ராகவேந்திரா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வராஜ் (வயது 65), இசை பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சாந்தி (55). சினிமா துறையில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவர்களுக்கு ராஜேஷ் பிராங்கோ (40), பிரகாஷ் (32) என்ற மகன்களும், பிரியா (38) என்ற மகளும் உள்ளனர். ராஜேஷ் பிராங்கோவுக்கு திருமணமாகி படப்பையில் வசித்து வருகிறார். பிரியாவுக்கு திருமணமாகி அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பிரகாஷ் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் சினிமா துறையில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சகோதரி பிரியாவின் வீட்டுக்கு சென்ற பிரகாஷ் அங்கு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியாவின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பிரியா சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதை பார்த்ததும் அவரது வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து சத்தம் போட்டனர். இதையடுத்து பிரகாஷ் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இது குறித்து அவரது தாய் மற்றும் அண்ணனுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். செல்வராஜை காணவில்லை என வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு படுக்கையறையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கைது
இதையடுத்து மாங்காடு போலீசார் அங்கேயும் சென்றனர். செல்வராஜ் மற்றும் பிரியா ஆகியோரது உடல்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதே பகுதியில் சுற்றி திரிந்த பிரகாசை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரகாஷ் சினிமா துறையில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக பணிபுரிந்து வந்ததும், நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு ஆளான அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
அடிக்கடி வீட்டில் பெற்றோர், சகோதரியிடம் தகராறு செய்து வந்த நிலையில் நேற்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த தந்தையை முதலில் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அதன் பிறகு சகோதரி இருக்கும் வீட்டுக்கு சென்று அவரது கழுத்தையும் அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.
கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? சொத்து பிரச்சினை காரணம் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.