திருப்பூர்
புனித கத்தரீனம்மாள் ஆலய தேர்த்திருவிழா
|திருப்பூரில் புனித கத்தரீனம்மாள் ஆலய தேர்த்திருவிழாவில் மதவேறுபாடுகளை களைந்து மும்மதத்தினர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
திருப்பூரில் புனித கத்தரீனம்மாள் ஆலய தேர்த்திருவிழாவில் மதவேறுபாடுகளை களைந்து மும்மதத்தினர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
புனித கத்தரீனம்மாள் ஆலயம்
திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் ஆண்டுதோறும் மே மாதம் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆலயத்தில் தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது. நேற்று காலை தேர்த்திருவிழாவையொட்டி ஆலயத்தில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொண்டு, சிறப்பு தேவசெய்தி வழங்கி, பிரார்த்தனை ஏறெடுத்தார். பின்னர் ஆலய வளாகத்தின் முன்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வரவேற்பு வளைவு மற்றும் வேளாங்கண்ணி மாதா கெபியை ஆயர் தாமஸ் அக்குவினாஸ் பிரார்த்தனை செய்து திறந்து வைத்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று மாலை திருப்பலியுடன் தொடங்கியது. விழாவுக்கு ஆலயத்தின் தலைமை ஆயர் ஹைசிந்த் தலைமை தாங்கினார். இதில் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி மறை வட்ட முதன்மை குரு ஸ்டீபன் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு, சிறப்பு தேவசெய்தி வழங்கி பிராத்தனை ஏறெடுத்தார். முடிவில் பங்கு மக்கள் ஒருவொருக்கொருவர் அன்பின் செய்தியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
திருப்பூரில் புனித கத்தரீனம்மாள் ஆலய தேர்த்திருவிழாவில் மதவேறுபாடுகளை களைந்து மும்மதத்தினர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதைத் தொடர்ந்து தேர்த்திருவிழா நடைபெற்றது. ஆலயத்தில் தொடங்கிய தேர்பவனி ரெயில் நிலையம் வழியாக ராயபுரம் சென்று, அங்கிருந்து நஞ்சப்பா பள்ளி வழியாக மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது. இதில் ஆலயத்தின் உதவி ஆயர் ஆண்டோ எட்வின், துணைத் தலைவர் டோனி, செயலாளர் ஏ.கே.ஆர்.வினோத் உள்பட ஆலயத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் திரளாக கலந்து கொண்டு, பாடல் பாடியபடி பவனியாக சென்றனர்.
மேலும் தேரோட்டத்தின் போது வழிநெடுகிலும் மதவேறுபாடுகளை களைந்து கிறிஸ்தவ மக்கள் மட்டுமின்றி இந்து, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஏராளமானோர் உப்பு, மிளகு ஆகியவற்றை படைத்து, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். இது சமுதாயத்தில் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும், பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. விழாவையொட்டி ஆலய வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டிருந்தது. திருப்பூர் வடக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.