< Back
மாநில செய்திகள்
சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் பிரதிஷ்டை விழா மற்றும் அசனப்பண்டிகை
திருப்பூர்
மாநில செய்திகள்

சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் பிரதிஷ்டை விழா மற்றும் அசனப்பண்டிகை

தினத்தந்தி
|
29 Jan 2023 11:14 PM IST

திருப்பூர் பங்களா ஸ்டாப் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் பிரதிஷ்டை விழா மற்றும் அசனப்பண்டிகையையொட்டி ஏழை, எளியோர் உள்பட 13 ஆயிரம் பேருக்கு அன்பின் விருந்து வழங்கப்பட்டது.

திருப்பூர் பங்களா ஸ்டாப் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் பிரதிஷ்டை விழா மற்றும் அசனப்பண்டிகையையொட்டி ஏழை, எளியோர் உள்பட 13 ஆயிரம் பேருக்கு அன்பின் விருந்து வழங்கப்பட்டது.

அசனப்பண்டிகை

பைபிளில் தாவீது மிகப்பெரிய ராஜாவாக இருந்தும் எளிய மனிதனாக இருந்த மேவிபோசேத் என் பந்தியிலே அசனம் பண்ணுவான் என்று கூறியதுடன், அவருடனே பந்தியிலே அப்பம் புசிக்க வைத்ததை நினைவுகூறும் விதமாகவே ஏழை, எளியோருக்கு அன்பின் விருந்து வழங்கப்பட்டு அசனப்பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக காலரா என்ற பெருந்தொற்று பரவி, பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டபோது இங்கிலாந்தை சேர்ந்த மிஷனரி ஜான்தாமஸ் என்பவர் தூத்துக்குடி மாவட்டம், மெய்ஞானபுரத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கினால் காலரா நோய் பரவுவதை தடுக்கலாம் என்ற நம்பிக்கையில் உணவு வழங்கியதை காலம், காலமாக அசனப்பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அசனப்பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

பிரதிஷ்டை விழா

இந்த நிலையில் திருப்பூர் அவினாசி ரோடு பங்களா ஸ்டாப்பில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் 60-வது ஆண்டு பிரதிஷ்டை விழா மற்றும் 11-வது ஆண்டு அசனப்பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 8 மணிக்கு ஆலயத்தின் ஆயர் ஜி.ஆனந்த்குமார், இணை ஆயர் பி.பால்டேவிஸ் ஆகியோர் தலைமையில் பிரதிஷ்டை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு சிறப்பு அசன ஐக்கிய விருந்து நடைபெற்றது. இதை ஆயர் ஜி.ஆனந்த்குமார் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பந்தி அமைத்து, மேசை போட்டு, வாழை இலையில் ஆட்டுக்கறி குழம்பு, சாதம், பருப்பு சாம்பார், வாழைக்காய் கூட்டு, ரசம் உள்பட அறுசுவையுடன் அசன உணவு வழங்கப்பட்டது. இதன்படி சுமார் 13 ஆயிரம் பேர் இந்த அன்பின் விருந்தை சாப்பிட்டு சென்றனர். முக்கிய பிரமுகர்களுக்கென தனி இடம் ஒதுக்கப்படாமல் ஜாதி, மத, இன வேறுபாடின்றி ஏழை, எளியோர் உள்பட அனைத்து தரப்பு மக்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டது மக்களிடையே உள்ள அன்பையும், ஐக்கியத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

ஏற்பாடு

விழாவுக்கான ஏற்பாடுளை ஆலயத்தின் கவுரவ செயலாளரும், திருமண்டல செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஜெபரூபன் ஜான்சன், கவுரவ பொருளாளர் ஜே.ப்ராங்க் பரிமள்ராஜ் ஆகியோர் தலைமையில், போதக சேகரக்குழு உறுப்பினர்கள் அகஸ்டின், ஞானரத்தின பாக்கியராஜ், ஜோசப் பட்டுராஜா, மெர்சிலின், பால்சிங் ஜெபராஜ், ரமேஷ் ஜெபராஜ், உஷா, வில்சன் துரைராஜ், யோபு, திருமண்டலக்குழு உறுப்பினர்கள் சார்லஸ், பெவின் சாமுவேல்ராஜ், மெர்சி எமியம்மாள், ராஜேந்திரன் மற்றும் ஆலய பங்கு மக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்