< Back
மாநில செய்திகள்
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் விபத்து: இரும்பு தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார் - டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
சென்னை
மாநில செய்திகள்

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் விபத்து: இரும்பு தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார் - டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

தினத்தந்தி
|
12 April 2023 10:46 AM IST

குரோம்பேட்டை ரெயில்வே நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் அதிகாலையில் கார் விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கவிழ்ந்தது. லேசான காயங்களுடன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சென்னை அடுத்த குரோம்பேட்டை ரெயில்வே நிலையம் அருகே சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இரும்புகளான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பல்லாவரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி சரத்குமார் (வயது 23) என்பவர் கார் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது, சரத்குமாருக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதில் நிலைத்தடுமாறிய கார் சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் பலமாக மோதியது. இதில் கார் தலைகுப்புற விழுந்து விபத்து ஏற்பட்டது

இதில் டிரைவர் சரத்குமார் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இது தொடர்பாக உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் வாகனத்தை அப்புறப்படுத்தி டிரைவரிடம் விசாரணை செய்தனர்.

இந்த சம்பவம் அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் ரெயில் நிலையம், பஸ் நிலையம் ஆகியவை அமைந்துள்ளதால் நெரிசல் மிக்க மிக முக்கியமான சாலையாக கருதப்படுகிறது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது,

ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் இந்த சுரங்கப்பாதை பணியினால் காலையிலும் மாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே உடனடியாக சுரங்கப்பாதை பணியை துரிதப்படுத்தி முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்