கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை: கோவா, கொச்சிக்கு விமான கட்டணம் உயர்வு
|கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி கோவா மற்றும் கொச்சிக்கு விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 23-ந்தேதி வரை அரையாண்டு வகுப்புகள் நடைபெறுகிறது. அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை விடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை சொந்த ஊருக்கும், சுற்றுலா நகரங்களுக்கு சென்றும் கொண்டாட திட்டமிட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் ரெயில்களில் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டதாலும், ஆம்னி பஸ் கட்டணம், விமான கட்டணம் போல் இருப்பதாலும் தற்போது பலரும் விமான பயணத்தை விரும்புகின்றனர்.
இதனால் நேரம் மிச்சப்படுவதுடன், விரைவாகவும் செல்ல முடிகிறது என்பதால் விமானங்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாட உள்நாடு மற்றும் வெளிநாடு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.
விமான கட்டணம் உயர்வு
விமான பயணத்துக்கான தேவை அதிகரித்து வருவதால், கட்டணமும் பல மடங்கு உயர்ந்து வருகிறது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் கட்டணம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளன. இதனால் பன்னாட்டு விமான கட்டணம் மட்டுமின்றி உள்நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய இடம் இல்லாத நிலை உருவாகி உள்ளது. தினசரி எல்லா விமானங்களும் முழு அளவில் நிரம்பி செல்கின்றன. ஒரு சில நாடுகளுக்கு இன்னும் சுற்றுலா விசா கிடைப்பதில் சிரமம் உள்ளதாக பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவுக்கு செல்ல சுற்றுலா விசா 2025 மார்ச் மாதத்தில் பெறக்கூடிய நிலை உள்ளது. ஜெர்மனிக்கு செல்ல சுற்றுலா விசா நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டு சுற்றுலா தலங்கள்
ஸ்ரீநகர், சண்டிகர், கோவா, கொச்சி உள்ளிட்ட உள்நாட்டு சுற்றுலா தலங்களுக்கு விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. கோவாவுக்கு வழக்கமாக ரூ.4,500 கட்டணமாகும். ஆனால் தற்போது ரூ.13,000 முதல் 14,000 வரை உள்ளது. இதே போல் கொச்சிக்கு ரூ.4 ஆயிரமாக இருந்த கட்டணம் தற்போது ரூ.10 ஆயிரமாக அதிகரித்து உள்ளது.
இது குறித்து விமான நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, "விமானங்களில் குறைந்த கட்டண டிக்கெட்டுகள் குறிப்பிட்ட அளவு தான் ஒதுக்கப்படும். அந்த டிக்கெட்டுகள் விற்பனை ஆனதும் அதிகமான கட்டணம் கொண்ட டிக்கெட்தான் கிடைக்கும். இது வழக்கமான நடைமுறைதான்" என்றனர்.