விழுப்புரம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைதிரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
|கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந்தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள பழமை வாய்ந்த கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சிறப்பு பிரார்த்தனை
தொடர்ந்து, நள்ளிரவு 12 மணிக்கு ஆலயங்களில் மணி அடித்த போது, ஏசு பிறந்ததை உணர்த்தும் விதமாக, குழந்தை ஏசுவின் சொரூபத்தை அருட்தந்தை ஜோசப் பிரான்சிஸ் தலைமையில் எடுத்து சென்று அங்குள்ள குடிலில் வைக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதேபோல், சி.எஸ்.ஐ தேவாலயம், கீழ்பெரும்பாக்கம் புனித சவேரியர்ஆலயம், தூயஜேம்ஸ் ஆலயம், சேவியர் காலனி தூய பவுல் மிஷினரி ஆலயம், டி.இ.எல்.சி. ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
விழாவில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். முன்னதாக தேவாலயங்கள் வண்ண விளக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதோடு கிறிஸ்துமஸ் தாத்தாவேடமணிந்து வந்தவர்கள் குழந்தைகளுக்கு பரிசுகளையும், இனிப்புகளையும் வழங்கினார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நள்ளிரவில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்க முடியாத கிறிஸ்தவர்கள் நேற்று நடந்த ஆராதனைகளில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
கிறிஸ்துமஸ் விழாவை விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் துணை போலீஸ்சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் 100 மேற்பட்ட போலீஸ்சார் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து தாலுகா காவல் நிலையம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி
இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதன்படி, மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஈருடையாம்பட்டு தூயவிண்ணரசி ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கிய கூட்டு திருப்பலி அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது. இதேபோல் சவேரியார் பாளையம் புனிதசவேரியார் ஆலயம், மைக்கேல்புரம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அருளம்பாடி சின்னப்பர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு கூட்டு திருப்பலி ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஏசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில்கள் அமைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் கூட்டம் அதிக அளவில் இருந்த தால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
புனித அடைக்கல அன்னை ஆலயம்
சங்கராபுரம் அருகே விரியூரில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை சகாய செல்வராஜ் தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டதோடு, உறவினர்கள், நண்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதேபோல் பழையனூர் புனித சூசையப்பர் ஆலயம், சோழம்பட்டு, காட்டுவன்னஞ்சூர் புனித அந்தோணி யார் ஆலயம், வடசிறுவள்ளூர் குழந்தை ஏசு ஆலயம், அழகாபுரம் புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.