< Back
மாநில செய்திகள்
சிறப்பு பிரார்த்தனை செய்து தவக்காலத்தை தொடங்கிய கிறிஸ்தவர்கள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சிறப்பு பிரார்த்தனை செய்து தவக்காலத்தை தொடங்கிய கிறிஸ்தவர்கள்

தினத்தந்தி
|
23 Feb 2023 12:00 AM IST

சிறப்பு பிரார்த்தனை செய்து தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் தொடங்கினர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன் நேற்று தொடங்கியது. சாம்பல் புதனையொட்டி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் காலை ஆராதனையின் போது கடந்த ஆண்டு பயன்படுத்திய குருத்தோலையை எரித்து அதன் சாம்பலை மக்கள் நெற்றியில் பங்கு தந்தை சிலுவை அடையாளம் இடும் நிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்தவர்கள் இந்த தவக்காலத்தில் மாமிச உணவுகளை தவிர்த்து உபவாசம் இருப்பது வழக்கம். இந்த காலங்களில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமையும் மாலையில் சிறப்பு வழிபாடு கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற ஏப்ரல் மாதம் 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறும், 6-ந் தேதி பெரிய வியாழனும், 7-ந் தேதி புனித வெள்ளியும், 8-ந் தேதி பெரிய சனியும், 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்