தமிழக கவர்னருக்கு எதிராக கிறிஸ்தவர்கள் போராட்டம்
|சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து திரளானோர் பங்கேற்றனர்.
சென்னை,
கால்டுவெல், ஜி.யு.போப் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்தை கண்டித்து அவருக்கு எதிராக தென்னிந்திய திருச்சபை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து திரளானோர் பங்கேற்றனர்.
தென்னிந்திய திருச்சபையின் பொறுப்பு பிரதம பேராயர் ரூபன் மார்க் தலைமையில் தென்னிந்திய திருச்சபையின் பொதுச்செயலாளர் பெர்னான்டஸ் ரத்தினராஜா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., மற்றும் தென்னிந்திய திருச்சபை பேராயர்கள் உள்ளிட்டோர் பேசினர்.
திருச்சபைகளைச் சேர்ந்தவர்கள் கவர்னருக்கு எதிராக கண்டன பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும் பலர் கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோரின் உருவ படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி வந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., 'கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் கால்டுவெல். அதேபோன்று இங்கிலாந்து மகாராணியிடம் இருந்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அவர் தங்கி இருந்த கொடைக்கானல் பங்களாவில் அவர் பெற்ற பட்டங்கள், சான்றிதழ்கள் பத்திரமாக உள்ளன. இந்த சான்றிதழ்கள் இங்கு எடுத்து வரப்பட்டுள்ளன' எனக்கூறினார்.
பின்னர், அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த சான்றிதழை மேடையில் காண்பித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.