கிறிஸ்தவர்கள் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு
|இந்த புனிதப் பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதத்தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.
சென்னை,
கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக (இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான்) தமிழக அரசால் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்புனிதப் பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதத்தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக நிதியுதவி வழங்கும் திட்டத்தினை ஏற்கனவே உள்ள நடைமுறைகளுடன் ECS முறையில் பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வழங்கும் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.