< Back
மாநில செய்திகள்
கிறிஸ்தவ பேராயர் தாக்கப்பட்ட விவகாரம்: தி.மு.க. எம்.பி.யை கைது செய்ய வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்
மாநில செய்திகள்

கிறிஸ்தவ பேராயர் தாக்கப்பட்ட விவகாரம்: தி.மு.க. எம்.பி.யை கைது செய்ய வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
29 Jun 2023 12:10 AM IST

கிறிஸ்தவ பேராயர் தாக்கப்பட்ட விவகாரம்: தி.மு.க. எம்.பி.யை கைது செய்ய வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிறிஸ்தவ மத பேராயரையே தி.மு.க. எம்.பி.யின் தூண்டுதல்பேரில் அவரது ஆதரவாளர்கள் அடித்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளித்துள்ளது. கடும் கண்டனத்திற்குரியது. சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டியவர்களே சட்டம்-ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருப்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று இருக்கிறதா? என்று ஐயப்படக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் அடியோடு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது. காவல்துறையினர் மீதுள்ள நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் இழந்துவிட்டனர்.

தி.மு.க. எம்.பி. உள்பட 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, பிஷப் காட்ப்ரே நோபுளும், திருநெல்வேலி சி.எஸ்.ஐ. பிஷப்பினுடைய ஆதரவாளர்களும், அலுவலகமும், பள்ளியும் தாக்கப்பட்டதற்கு மூல காரணமாக விளங்கிய தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்யவும்; அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, சட்டத்தின்முன் நிறுத்தி, விரைவில் அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்