தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சித்த வைத்தியர்
|தோட்டத்தில் இருந்த 11 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.
ஈரோடு,
கள்ளக்குறிச்சி விஷ சாராய பலியை தொடர்ந்து தமிழக அரசு விஷ சாராயத்தை அறவே ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. இதனை சட்டசபையில் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை வழக்கு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் சிறை தண்டனை மற்றும் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா பயிரிடுதல் மற்றும் போதை மருந்துகள் தயாரிப்புகள் தொடர்பான குற்றங்களிலும் ஈடுபடுபவர்களுக்கு ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக கோபி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது மூலிகை செடிகளுடன் கஞ்சா செடி பயிரிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தோட்ட உரிமையாளரான சித்த வைத்தியர் மாரப்பன் (வயது 80) என்பவரை கைது செய்தனர். உடந்தையாக இருந்ததாக அவருடைய மகன் கருப்புசாமியும் (45) கைது செய்யப்பட்டார். மேலும் தோட்டத்தில் இருந்த 11 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.