கடலூர்
தேவநாதசுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்
|திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லிக்குப்பம்,
சித்திரை பிரம்மோற்சவம்
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 3.45 மணிக்கு மேல் 4.40 மணிக்குள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாதசுவாமி கொடிமரத்திற்கு முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
கொடி ஏற்றம்
பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து தினசரி கோவிலில் சூரிய பிரபை, வெள்ளி சிம்ம வாகனம், யாளி வாகனம், அனுமந்த வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேணுகோபாலன் சேவை தங்க விமானத்திலும், சேஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது.
5-ந் தேதி தேரோட்டம்
மே 1-ந் தேதி இரவு கருட மகா உற்சவத்தன்று கருடவாகனத்தில் தேவநாதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந் தேதி காலை 5 மணி அளவில் நடக்கிறது. 6-ந்தேதி மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவமும், 7-ந்தேதி காலை துவாதச ஆராதனமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.