சித்திரை திருவிழா: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் - மதுரை கலெக்டர் அறிவுறுத்தல்
|பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என மதுரை கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 16 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகம் ஏப்ரல் 30-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மதுரை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
"மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தொடர்பான மண்டகப் படிகளில் அன்னதானம் வழங்குதல் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பிரசாத உணவுகள், சர்பத், குளிர்பானங்கள் ஆகியவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். மேலும் பாதுகாப்பான உணவாக இருப்பதோடு செயற்கை சாயங்கள் எதுவும் சேர்க்காமல் வழங்க வேண்டும்.
அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்து மேற்படி இடங்களில் சேரும் கழிவுகளை முறையாக சேகரித்து மாநகராட்சி தெரிவித்துள்ள இடங்களில் சேர்க்க வேண்டும். அதேபோல் ஓட்டல்களிலும் சுத்தமான முறையில் தயார் செய்யப்பட்ட உணவுகளை வழங்க வேண்டும்.
திருவிழாவில் மண்டகப் படிகள் மற்றும் பொது இடங்களில் அன்னதானம், பிரசாதம் வழங்கும் நபர்கள் foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி (பதிவு சான்றிதழ்) பெற்று பிரசாதங்களை வழங்க வேண்டும். பொதுமக்களுக்கும் வழங்கப்படும் உணவு மற்றும் உணவு பொருட்கள் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால் உடனே அரசின் உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்-அப் எண் 9444042322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்."
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.