< Back
மாநில செய்திகள்
சிற்றப்பாக்கம் தடுப்பணை முழுவதுமாக நிரம்பியது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சிற்றப்பாக்கம் தடுப்பணை முழுவதுமாக நிரம்பியது

தினத்தந்தி
|
15 Sept 2023 2:12 PM IST

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றப்பாக்கம் தடுப்பணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றப்பாக்கத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே 1983-ம் ஆண்டு திருப்பு அணை கட்டப்பட்டது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பிச்சாடூரில் ஆரணியார் அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.

இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, நாகலாபுரம், கண்டிகை, காரணி சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, சிற்றம்பாக்கம், பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து வங்க கடலில் கலக்கிறது. இப்படி வீணாக கடலில் தண்ணீர் கலப்பதை தடுத்து நிறுத்தி நிலத்தடி நீர் மட்டம் உயர, விவசாயிகள் பயன்பெற சிற்றப்பாக்கத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே இந்த தடுப்பணை கட்டப்பட்டது.

ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர மாநிலம் நந்தனமம் காட்டுப் பகுதியில் உள்ள ஓடைகளின் தண்ணீர் ஆரணி ஆற்றில் பாய்ந்து வருவதால் சிற்றப்பாக்கத்தில் உள்ள தடுப்பணை நேற்று முழுவதுமாக நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழுவதுமாக நிரம்பியதால் தடுப்பணைக்கு மேல் வெள்ளம் பாய்கிறது.

மேலும் அந்தேரி, பேரிட்டிவாக்கம், உப்பரபாளையம், வடதில்லை, மாம்பாக்கம், வேலகாபுரம் கிராம மக்கள் மாற்று பாதை தூரமாக இருப்பதால் பெரும்பாலும் இந்த தடுப்பணையை கடந்து தங்கள் கிராமங்களுக்கு செல்கின்றனர். தடுப்பணை முழுவதும் நிரம்பி வெள்ளம் வெளியேறும் காலங்களில் ஆபத்தான முறையில் மக்கள் அந்த வழியை பயன்படுத்துவதை போலீசார் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்