செங்கல்பட்டு
சீன நாட்டு தூதர் மாமல்லபுரம் வருகை; புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்
|இந்தியாவுக்கான சீனா நாட்டு தூதர் சன் விதாங் மாமல்லபுரம் வருகை தந்தார். அவர் பல்லவர் கால புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தார்.
மாமல்லபுரம்:
இந்தியாவுக்கான சீன நாட்டு தூதர் சன் விதாங் தலைமையில் அந்த நாட்டு தூதரக அதிகாரிகள் 5 பேர் மாமல்லபுரத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுலா வந்தனர். முன்னதாக மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதிக்கு வந்த சீன நாட்டு தூதர் மற்றும் அவருடன் வந்த தூதரக அதிகாரிகளை மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரி ராஜாராமன் வரவேற்றார்.
பின்னர் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் பார்த்து ரசித்தனர். கடற்கரை கோவிலின் இரு கருவறைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டனர். கடற்கரை கோவில் வளாகத்தில் முன் பகுதியில் உள்ள மாமல்லபுரம் துறைமுக பட்டினமாக இருந்ததற்காக சான்றான படகு துறை, அகழி பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.
அப்போது உடன் வந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கடற்கரை கோயில் உருவாக்கப்பட்டத்தின் பின்னணி, கடல் ஓரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் அவை எப்படி கட்டப்பட்டது. கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கோயில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களை விரிவாக விளக்கி கூறினார். அவரிடம் சீனா நாட்டு தூதர் கடற்கரை கோயிலின் அரிய தகவல்களை பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார்.
மேலும் கடற்கரை கோவில் அனைத்து சிற்பங்களையும் ரசித்து பார்த்த அந்நாட்டு தூதர் மற்றும் அவருடன் வந்த தூதரக அதிகாரிகள் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
குறிப்பாக மாமல்லபுரம் வந்த போது தங்கள் நாட்டு அதிபர் ஜின்பிங் நின்று புகைப்படம் எடுத்த வெண்ணை உருண்டைக்கல் பகுதியில் அதே இடத்தில் நின்று சீன தூதர் புகைப்படம் எடுத்து கொண்டார். சீன நாட்டு தூதர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.