திருவள்ளூர்
ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்; தொழிலாளி கைது
|ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த பஸ்சில் பயணம் செய்த திருவள்ளூர் பெரிய குப்பத்தை சேர்ந்த தொழிலாளி ஸ்டீபன் (வயது 51) என்பவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை சுந்தரமூர்த்தி, அவரது உறவினர்கள் லோகேஷ், ஜெகன் ஆகியோருடன் சேர்ந்து ஸ்டீபனை தாக்கி உள்ளனர். பின்னர் இதுபற்றி திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்டீபனை கைது செய்தனர். மேலும், இது சம்பந்தமாக அவரிடம் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் தொழிலாளி ஸ்டீபனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக போலீசார் சுந்தரமூர்த்தி, லோகேஷ், ஜெகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.