ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபருக்கு தர்மஅடி
|சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
நெல்லை,
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த விருதுநகர் வாலிபருக்கு சக பயணிகள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நெல்லைக்கு குளிர் சாதன வசதி கொண்ட ஒரு பஸ் நேற்று முன்தினம் புறப்பட்டது. அந்த பஸ்சில் வழக்கத்திற்கு மாறாக பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ்சின் முன் பகுதியில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் ஆண்களும் இருந்தனர். அந்த பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் பெண் பயணியிடம் வாலிபர் ஒருவர் பின்பக்க இருக்கையில் அமர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நெல்லை அருகே மூன்றடைப்பு பகுதியில் பஸ் வந்தபோது வாலிபர் வரம்பு மீறியதால் அந்த பெண் கத்திக் கூச்சலிட்டார்.
உடனே, பஸ்சில் இருந்த சகபயணிகள் சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த பெண் நடந்த சம்பவத்தை டிரைவரிடம் கூறவே இதுகுறித்து பொன்னாக்குடி பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முன்னீர்பள்ளம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் விருதுநகர் பள்ளம்பட்டியை சேர்ந்த மாரிக்கனி (வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து மாரிக்கனியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.