ராமநாதபுரம்
நோய் பாதிப்பால் மிளகாய் விளைச்சல் குறைவு
|முதுகுளத்தூர் பகுதியில் நோய் பாதிப்பால் மிளகாய் விளைச்சல் குறைந்து உள்ளன. எதிர்பார்த்த விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் பகுதியில் நோய் பாதிப்பால் மிளகாய் விளைச்சல் குறைந்து உள்ளன. எதிர்பார்த்த விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மிளகாய் சாகுபடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் மிளகாய் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மிளகாய் விதைக்கும் பணியை தொடங்குகிறார்கள். மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் செடிகளில் மிளகாய் காய்க்க தொடங்கியவுடன் விவசாயிகள் அதை பறிக்க தொடங்கி விடுவார்கள்.
இந்த ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் செடிகளில் மிளகாய் காய்க்க தொடங்கியுள்ளன. தற்போது மிளகாய்களை பறிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நோய் தாக்குதல்
குறிப்பாக முதுகுளத்தூர் அருகே உள்ள மட்டியாரேந்தல், தாழியாரேந்தல், ஆலங்குளம், தெற்கு மல்லல், தேரிருவேலி, கருமல், பூசேரி, கடம்போடை உள்ளிட்ட பல கிராமங்களில் செடிகளில் காய்க்கத் தொடங்கியுள்ள மிளகாய்களை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாகவே ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு மழையே இல்லாததால் மிளகாய் செடிகளில் மிளகாய் ஒருவித நோய் தாக்குதலாலும் பாதிக்கப்பட்டு உள்ளன.
அது போல் மிளகாயை காப்பாற்ற விவசாயிகள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி மிளகாய் செடிகளுக்கு பாய்ச்சி வருகின்றனர். இத்தனை கஷ்டப்பட்டும் இந்த ஆண்டு மிளகாய்க்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
விலை குறைவு
இது குறித்து முதுகுளத்தூர் அருகே தாழியாரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் கூறியதாவது:-
இந்த ஆண்டு மழையே பெய்யாததால் தண்ணீர் இல்லாமல் மிளகாய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிளகாய் செடிகளில் அதிக அளவு சோடை(நோய்) பாதிப்பால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 10 கிலோ மிளகாய் ரூ.3500 வரை விலை போனது. ஆனால் இந்த ஆண்டு 10 கிலோ மிளகாய் ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே விலை போகின்றது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மிளகாய் விளைச்சலும் குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் விலையும் குறைந்துள்ளதால் நாங்கள் மிகவும் கவலை அடைந்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.