ராமநாதபுரம்
பூச்சி தாக்குதலால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு
|முதுகுளத்தூர் அருகே பல கிராமங்களில் பூச்சி தாக்குதலால் மிளகாய் விளைச்சல் கடும் பாதிப்பு அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே பல கிராமங்களில் பூச்சி தாக்குதலால் மிளகாய் விளைச்சல் கடும் பாதிப்பு அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மிளகாய் சாகுபடி
ராமநாதபுரம் மாவட்டத்திலேயே முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றி உள்ள பெரும்பாலான கிராமங்களில் மிளகாய் சாகுபடி அதிகமாகவே நடைபெற்று வருகின்றது. அதுபோல் ஆண்டுதோறும் மிளகாய் சாகுபடி சீசன் ஆனது புரட்டாசி, ஐப்பசி மாதத்தில் இருந்து தொடங்கப்படும்.ஜூலை, ஆகஸ்டு வரையிலும் இந்த மிளகாய் சீசன் இருக்கும்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய மட்டியாரேந்தல், தாழியாரேந்தல், ஆலங்குளம், பூசேரி, மல்லல், கீழசிறுபோது, மேலசிறுபோது உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் தற்போது மிளகாய் சாகுபடி தீவிரமாகவே நடைபெற்று வருகின்றது.
பூச்சி தாக்குதல்
இதனிடையே முதுகுளத்தூர் அருகே உள்ள மல்லல் மட்டியாரேந்தல், தாழியாரேந்தல் உள்ளிட்ட பல கிராமங்களில் மிளகாய் செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் உள்ளதால் மிளகாய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பூச்சி தாக்குதலால் செடிகள் வெள்ளை நிறமாக காட்சியளிப்பதுடன் மிளகாய் நிறமும் மாறிய நிலையில் காய்த்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இது குறித்து மல்லல் கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி சண்முகவள்ளி கூறும் போது:-
இந்த ஆண்டு மழையே பெய்யாததால் மிளகாய் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊருணியிலும் கண்மாயிலும் தண்ணீர் இல்லாததாலும் மிளகாய் செடிகளில் மிளகாய் காய்க்க தேவையான தண்ணீர் இல்லாமல் செடிகள் கருகி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு மிளகாய் செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் செடிகளில் காய்த்துள்ள மிளகாயும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் இந்த ஆண்டு மிளகாய்க்கு எதிர்பார்த்த அளவு விலை கிடைக்கவில்லை.
விலை குறைவு
கடந்த ஆண்டு 10 கிலோ குண்டு மிளகாய் ரூ.2,200 இல் இருந்து ரூ.2,800 வரை விலை போனது.ஆனால் இந்த ஆண்டு ரூ.800லிருந்து ரூ.12000க்கு மட்டுமே விலை போகின்றது. மிளகாய் செடிகளில் இருந்து பறிக்கப்படும் இந்த மிளகாய்களை உத்தரகோசமங்கை விலக்கு ரோட்டில் உள்ள வேளாண் துறை அரசு கிட்டங்கியில் தான் கொடுக்கிறோம்.வேளாண்துறையினரே மிளகாய்க்கு குறைந்த விலையை நிர்ணயம் செய்து தான் விவசாயிகளுக்கு கொடுத்து வருகின்றனர். மிளகாய்க்கு நல்ல விலை கொடுக்க வேண்டும் என சாலை மறியல் போராட்டம் நடத்தியும் இதுவரையிலும் விலை உயர்த்தி வழங்கப்படவில்லை.
எனவே தமிழக அரசு மிளகாய்க்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.