சென்னை
வாலிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலி பறிப்பு
|குரோம்பேட்டையில் வாலிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை பாத்திமா நகர் கிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் அவினாஷ் (வயது 30). இவர், அடையாறில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 'லிப்ட் ஆபரேட்டராக' வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வந்தார். நன்மங்கலம்-குரோம்பேட்டை இணைப்பு சாலை வழியாக வீட்டுக்கு திரும்பியபோது 2 பேர் அவரை வழிமறித்து நிறுத்தி, 'எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. இந்த பகுதியில் மெக்கானிக் கடை உள்ளதா?' என கேட்டனர்.
அப்போது திடீரென 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை அவினாஷ் முகத்தில் தூவினர். கண்ணில் மிளகாய் தூள் விழுந்ததால் நிலைதடுமாறிய அவினாஷ் சுதாரிப்பதற்குள் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மர்மநபர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.