சென்னை
மிளகாய் பொடியை தூவி பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
|பூ வாங்குவதுபோல் நடித்து மிளகாய் பொடியை தூவி பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
சென்னையை அடுத்த நன்மங்கலம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலு (வயது 54). இவருடைய மனைவி ஹேமாவதி (50). கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து பூ வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் 2 மர்ம நபர்கள் பாலு வீட்டுக்கு வந்து ஒரு நிகழ்ச்சிக்கு அவசரமாக பூக்கள் வேண்டும் என கூறினர். ஆனால் அந்த மர்மநபர்கள் கேட்ட அளவுக்கு தங்களிடம் பூக்கள் இருப்பு இல்லாததால், அருகாமையில் உள்ள மற்றொரு வியாபாரிடம் பூக்கள் வாங்கி வர பாலு வெளியே சென்று விட்டார்.
இதனால் ஹேமாவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். உடனே மர்மநபர்கள் ஹேமாவதியின் கண்களில் மிளகாய் பொடியை தூவியதுடன், அவரது வாயை இறுக்கமாக மூடினர். பின்னர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
வீட்டுக்கு திரும்பி வந்த பாலுவிடம் நடந்த சம்பவம் குறித்து ஹேமாவதி கூறினார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.