< Back
மாநில செய்திகள்
பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் தின விழா
ஈரோடு
மாநில செய்திகள்

பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் தின விழா

தினத்தந்தி
|
15 Nov 2022 4:52 AM IST

பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

குழந்தைகள் தின விழா

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் மாதம் 14-ந் தேதி குழந்தை தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குழந்தைகள் தின விழா பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சுமதி தலைமை தாங்கினார். விழாவில் மாணவர்கள் ஜவஹர்லால் நேரு வேடம் அணிந்து பங்கேற்றனர்.

இதில் ஈரோடு வட்டார கல்வி அதிகாரி மேகலா கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். சேலம் மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 2-வது பரிசு பெற்ற 3-ம் வகுப்பு மாணவர் கார்த்திக்குமார், ஈரோடு மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் 2-வது இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற 7-ம் வகுப்பு மாணவர் யோகன் ஆகியோருக்கும், ஈரோட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற 37 பேருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பிசியோதெரபிஸ்ட் அபிராமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியை மல்லிகா நன்றி கூறினார்.

திருநகர் காலனி

ஈரோடு திருநகர் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை அருணாதேவி தலைமை தாங்கினார். விழாவில் நேருவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகராட்சி முதலாவது மண்டல தலைவர் ப.க.பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

இதில் பள்ளிக்கூட ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பல்வேறு அரசு பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

கொங்கு கல்வி நிலையம்

ஈரோடு கொங்கு கல்வி நிலையம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளிக்கூட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். தாளாளர் கே.செல்வராஜ், பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கூட முதல்வர் பி.வனிதா சுப்புலட்சுமி வரவேற்று பேசினார். இதில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவ- மாணவிகள் தேசத்தலைவர்களின் வேடம் அணிந்து பங்கேற்றனர்.

விழாவில் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூட முதல்வர் நதியா மற்றும் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்