< Back
மாநில செய்திகள்
சாவி, ஊக்குகளை விழுங்கிய குழந்தைகள்  - ஆபரேஷன் இன்றி அகற்றி அரசு டாக்டர்கள் சாதனை
மதுரை
மாநில செய்திகள்

சாவி, ஊக்குகளை விழுங்கிய குழந்தைகள் - ஆபரேஷன் இன்றி அகற்றி அரசு டாக்டர்கள் சாதனை

தினத்தந்தி
|
2 Jun 2023 1:27 AM IST

சாவி, ஊக்குகளை விழுங்கிய குழந்தைகளுக்கு ஆபரேஷன் இன்றி அகற்றி மதுரை அரசு டாக்டர்கள் சாதனை படைத்தனர்.


சாவி, ஊக்குகளை விழுங்கிய குழந்தைகளுக்கு ஆபரேஷன் இன்றி அகற்றி மதுரை அரசு டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

ஊக்கை விழுங்கிய குழந்தைகள்

தென் மாவட்டத்தில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாகவும் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், மானாமதுரையை சேர்ந்த ரவிசந்திரன்-அகல்யா தம்பதியினரின் 2½ வயது ஆண் குழந்தை, தூத்துக்குடியை சேர்ந்த பெனியல் ஜெபராஜ்-சாரா தம்பதியின் 1½ வயது ஆண்குழந்தை வீட்டில் வைத்திருந்த ஊக்கை விழுங்கியதாக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டன. இதுபோல், கரூரை சேர்ந்த கனகராஜ்-அனிஸ்டா தம்பதியரின் 2 மாத ஆண்குழந்தை சாவியை விழுங்கிய நிலையில் அரசு ஆஸ்பத்திரியின் பச்சிளம் குழந்தைகள் நலத்துறை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.

இந்த 3 குழந்தைகளையும் பரிசோதித்த டாக்டர்கள், எந்தவித அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளாமல் எண்டாஸ்கோப்பி முறையில் ஊக்கு மற்றும் சாவியை பத்திரமாக அகற்றினர்.

3 குழந்தைகள்

இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறுகையில், "மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இதுபோல் அதிக அளவில் குழந்தைகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை இன்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் 30-க்கும் அதிகமான குழந்தைகள் ஊக்கு, சாவி, இரும்பு துண்டுகள், நாணயங்கள், தோடு உள்ளிட்டவற்றை விழுங்கியதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பொருட்கள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு, சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 தினங்களில் இதுபோல் 3 குழந்தைகள் விழுங்கிய பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. எனவே, வீட்டில் உள்ள குழந்தைகள் எதையும் விழுங்கிவிடாமல் கவனமாக அவர்களை பார்த்து கொள்ள வேண்டும்" என்றனர்.

மேலும் செய்திகள்