< Back
மாநில செய்திகள்
பெற்றோர்களின் மடியில் அமர்ந்து வித்யாரம்பம் எழுதிய குழந்தைகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பெற்றோர்களின் மடியில் அமர்ந்து வித்யாரம்பம் எழுதிய குழந்தைகள்

தினத்தந்தி
|
25 Oct 2023 2:38 AM IST

விஜயதசமியையொட்டி தஞ்சையில் பெற்றோர்களின் மடியில் அமர்ந்து வித்யாரம்பம் எழுதி குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தனர்.

விஜயதசமி

நவீன உலகில் குழந்தைகளின் படிப்பில் பெற்றோர்கள் தனிகவனம் செலுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. பொருளாதார பிரச்சினைகள் இருப்பினும் பெரும்பாலான பெற்றோர்கள் சிறந்த கல்வி அறிவினை குழந்தைகளுக்கு வழங்குவதற்காக பலகட்ட முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி சரஸ்வதி பூஜை தினத்தின் மறுநாள் விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை எட்டிய போதும் விஜயதசமி தினம் வரும் வரை காத்திருந்து குழந்தைகளை அன்றைய தினம் பள்ளியில் பெற்றோர்கள் சேர்க்கின்றனர்.

மாணவர் சேர்க்கை

அதன்படி தஞ்சையில் உள்ள பல பள்ளிகளில் விஜயதசமி தினமான நேற்று மாணவர் சேர்க்கை நடந்தது. விஜயதசமியையொட்டி தஞ்சை கீழவாசல் பகுதி கவாஸ்காரத்தெருவில் உள்ள குழந்தைகள் மையத்தில் மாணவர் சேர்க்கை நடந்தது. அப்போது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மடியில் அமர வைத்து அரிசியில் தமிழின் முதல் எழுத்தான "அ" என கையை பிடித்து எழுத வைத்து (வித்யாரம்பம் செய்து) சேர்த்தனர்.இதனையடுத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும், புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி தஞ்சையில் உள்ள கோவில்களிலும் விஜயதசமி தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அதிகளவில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்