தேனி
குழந்தைகள் கல்வி, சிறப்பான வாழ்வு பெறசிறு குடும்பமே சிறப்பாக இருக்கும்:கலெக்டர் தகவல்
|குழந்தைகள் சிறந்த கல்வி, சிறப்பான வாழ்வு பெறுவதற்கு சிறு குடும்பமே சிறப்பாக இருக்கும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
மக்கள் தொகை
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகளை பற்றியும், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதின் அவசியத்தை பற்றியும், நாட்டு மக்களிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூலை 11-ந்தேதி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம், குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதிலும் அகில இந்திய அளவில் 2-வது இடத்தில் உள்ளது.
ஆண்கள் 25 வயதுக்கு பிறகும், பெண்கள் 21 வயதுக்கு பிறகும் திருமணம் செய்துகொண்டு, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையை தொடர்ந்து கடைபிடித்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும்.
சிறு குடும்பம்
மக்கள் தொகையின் தாக்கம் பற்றி அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் நல்வாழ்வு வாழவும், சிறந்த கல்வி மற்றும் சிறப்பான வாழ்க்கை வசதிகளை பெற சிறு குடும்பமே சிறப்பானதாக இருக்கும்.
இதுதொடர்பாக, கடந்த மாதம் 27-ந்தேதி முதல் நேற்று வரை மக்கள்தொகை விழிப்புணர்வு காலமாகவும், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ந்தேதி வரை மக்கள் தொகை நிலைப்படுத்தும் காலமாகவும், இருவார குடும்பநல விழாவாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் குடும்பநல ஆலோசனைகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.