< Back
மாநில செய்திகள்
3 குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்த தாய் - அதிர்ச்சி சம்பவம்
மாநில செய்திகள்

3 குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்த தாய் - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
6 Aug 2022 6:41 AM IST

திருவண்ணாமலை அருகே குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு தாய் ஆற்றில் குதித்ததில் குழந்தைகள் உயிரிழந்தன. தாய் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா (27). இவர்களது மகன்கள் நிலவரசு (5), குறளரசு (4). மகள் யாஷினி (7 மாதம்). இதில் நிலவரசு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மதியம் அமுதா தனது மகன்களான நிலவரசு, குறளரசு மற்றும் 7 மாத கைக்குழந்தையான யாஷினி ஆகிய மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு தென்பெண்ணை ஆற்றின் கரைக்கு வந்தார். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்று கொண்டிருந்தது.

அங்கு அமுதா திடீரென தனது 3 குழந்தைகளையும் துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றுக்குள் குதித்தார். பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் 3 குழந்தைகளும், அமுதாவும் மூழ்கினர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில் 3 குழந்தைகளும் பரிதாபமாக இறந்து விட்டனர். அமுதா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அமுதாவின் மூத்த மகன் நிலவரசு நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்தான். மதியம் அமுதா திடீரென பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் கூறி அவனை அழைத்துச்சென்றுள்ளார். தாய் தன்னை கொல்ல போகும் விபரீதம் அறியாமல் அவனும் தாயுடன் சென்றுள்ளான் என்பது தெரியவந்தது.

அமுதா குடும்ப தகராறு காரணமாக 3 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்தாரா? அல்லது வறுமை காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்