< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் சிறுவன் மூளைச்சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் சிறுவன் மூளைச்சாவு

தினத்தந்தி
|
2 Jun 2023 4:04 PM IST

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் - கார் மோதிய விபத்தில் சிறுவன் மூளைச்சாவு அடைந்தான்.

கார்- மோட்டார் சைக்கிள் மோதல்

காஞ்சீபுரம் மாவட்டம் ஜீவா நகர் இருளர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி மாலா. இவர்களுக்கு 5 குழந்தைகள். கடந்த மாதம் மாலா தனது மகன் முத்துக்குமரனை (13) திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் வசிக்கும் கணவர் மாரிமுத்துவின் தம்பி முத்துப்பாண்டி வீட்டில் விட்டுவிட்டு மற்ற குழந்தைகளுடன் சென்னை கொளத்தூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி காலை முத்துக்குமரன் தனது சித்தப்பா முத்துப்பாண்டியின் மோட்டார் சைக்கிளை அவருக்கு தெரியாமலேயே எடுத்துக்கொண்டு தனது நண்பர் மணிகண்டனுடன் (12) சென்றான்.

திருப்பாச்சூர் அருகே திருவள்ளூர் - திருப்பதி சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த கார் முத்துக்குமரன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மூளைச்சாவு

இதில் முத்துக்குமரனும் மணிகண்டனும் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் முத்துக்குமரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவின்றி சாலையில் கிடந்தார். மணிகண்டன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முத்துக்குமரன் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துக்குமரனுக்கு நேற்று முன்தினம் மூளைச் சாவு ஏற்பட்டது. இதையடுத்து முத்துக்குமரனின் பெற்றோர் அவனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக கூறினர். இதையடுத்து டாக்டர்கள் முத்துக்குமரனின் உடலில் இருந்த சில பாகங்களை தானமாக எடுத்துக் கொண்டனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்