< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டில் குழந்தைகள் கடத்தப்படவில்லை: உண்மை சரிபார்ப்புக் குழு தகவல்
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் குழந்தைகள் கடத்தப்படவில்லை: உண்மை சரிபார்ப்புக் குழு தகவல்

தினத்தந்தி
|
9 July 2024 10:51 AM IST

செங்கல்பட்டு அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து அக்காள், தம்பியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒழலூர் பகுதியை சேர்ந்தவர் வேலன் (வயது 31). ஆட்டோ ஓட்டி வருகிறார். அவருக்கு திருமணமாகி ஆர்த்தி (30) என்கிற மனைவியும், 11 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். கடந்த ஓர் ஆண்டுகளாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக ஆர்த்தி பிரிந்து சென்று தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

மகள் செங்கல்பட்டு ஒழலூர் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பும், மகன் 2-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்நிலையில் மகள் மற்றும் மகன் ஆகிய அக்காள், தம்பி இருவரும் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில், மதியம் உணவு இடைவேளையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பள்ளிக்குள் புகுந்து காரில் 2 பேரையும் கடத்திச்சென்றதாக கூறப்பட்டது.

இதுகுறித்து பள்ளி சார்பில் தெரிவித்த தகவல் அடிப்படையில், விரைந்து சென்ற வேலன் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், வாகன சோதனையில் ஈடுபட்டும் போலீசார் மர்மகும்பலை வலைவீசி தேடி விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், காவேரிபாக்கம் அருகே மாணவர்கள் இருவரையும் போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தாய் ஆர்த்தி மற்றும் குழந்தைகள் இருவரையும் காவேரிப்பாக்கத்தில் மீட்ட போலீசார், செங்கல்பட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

மேலும் கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வேலன் அரவணைப்பில் மாணவர்கள் இருந்துவந்த நிலையில், தாய் ஆர்த்தி, மற்றொரு நபருடன் சேர்ந்து குழந்தைகளை அழைத்துச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நண்பரின் காரில் குழந்தைகளை தாய் அழைத்துச் சென்றதாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்