< Back
மாநில செய்திகள்
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

தினத்தந்தி
|
12 Jun 2023 10:02 PM IST

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டா் பூங்கொடி தொடங்கி வைத்தார்.

கையெழுத்து இயக்கம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. இதனை கலெக்டர் பூங்கொடி கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக கையெழுத்திட்டனர். இதையடுத்து குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலெக்டர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகைதீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவசிந்து உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்த கூடாது, குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்

இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. சரவணன் தலைமையிலும், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பழனிசாமி தலைமையிலும் அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

பழனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், அலுவலர் ஜெயகவுரி தலைமையில் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்தனர். இதைத்தொடர்ந்து அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடமும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, வேடசந்தூர் ஆத்துமேட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி தொடங்கி வைத்தார். தொழிலாளர் துறை உதவி ஆணையர் சிவசிந்து, முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். குழந்தைகள் திருமணம் தடுத்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கோகிலா வரவேற்றார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதகலா, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி, அனைத்து வர்த்தக சங்க தலைவர் சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அமைதி அறக்கட்டளை திட்ட மேலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இளம் வயது திருமணம் தடுத்தல், குழந்தைகளின் உடல்நிலை, மனநிலை, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. முடிவில் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்